அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது முறையாக அரச இலக்கிய விருது விழாவை ஏற்பாடு செய்ததுடன், 2025 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குத் தமது சிறந்த படைப்புகளினால் ஆற்றிய சேவையைப் பாராட்டி, 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றிய சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல மூன்று இலக்கியப் படைப்பாளிகளுக்கு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகின்ற “சாஹித்யரத்ன” கெளரவ விருதுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. சிங்கள மொழிப் பிரிவுக்காகப் பராக்கிரம கொடித்துவக்கு அவர்களும், தமிழ் மொழிப் பிரிவுக்காகக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் அவர்களும், ஆங்கில மொழிப் பிரிவுக்காகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகா அவர்களும் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
2026 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர் மற்றும் சிங்கள, தமிழ், ஆங்கில ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட 2026 இலக்கிய இதழும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.