வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவ்வருடத்திற்குள் 50 வீத ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரினால் மேலதிக நிதியையும் ஒதுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்விகளை முன்வைக்கையில்,
“வடமாகாணத்தில் அதிகளவான தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுவதாலும், ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்படாமையாலும் பாடசாலைகளில் காணப்படுகின்ற பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களைத் துரிதகதியில் திருத்துவதில் இடர்நிலைகள் காணப்படுகின்றன. எனவே, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சீர்செய்வதோடு ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
பாடசாலைகளில் பெருகியுள்ள இலத்திரனியல் கழிவுகளைச் சீராக்குவதில் வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் இடர் நிலவுகின்றது. வலய மட்ட வன்பொருள் அணியே பாடசாலைகளில் உள்ள கணினிகளைத் திருத்துவதோடு, இலத்திரனியல் சாதனங்களுக்குரிய தொழினுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளையும் வழங்குகிறது. இந்த வன்பொருள் அணி ஒவ்வொரு வலையத்திலும் உள்ள தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களைக் கொண்டே இயங்குகிறது.
வடமாகாணத்தில் மொத்தமாக 170 தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் (31%) பற்றாக்குறையாக உள்ளனர்.
இப்பற்றாக்குறைச் சதவீதமானது வடமாகாணத்தில் உள்ள சீரற்ற ஆசிரியர் வளப் பரம்பலால் தீவகம், தென்மராட்சி, மடு உள்ளிட்ட கல்வி வலயங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையோடு, ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று கணினிகளைத் திருத்துவதற்கும் தொழினுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் வன்பொருள் அணியினர் மிகவும் இடர்படுகின்றனர்.
இதற்குப் பதிலளித்துப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பேசுகையில்,
“ரவிகரன் எம்.பி. எழுப்பிய கேள்வி மிகவும் பொருத்தமானது. இலத்திரனியல் சாதனங்களைத் திருத்துவதற்கு எமக்கு ஆசிரியர்களின் குறைபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், தற்போது அதற்காக ஆசிரியர்களைப் பணிக்கமர்த்துவதற்கான வேலைகளை முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் ஊடாக இந்தக் குறைபாடு தீர்க்கப்படும்.
தற்போது குறித்த ஆளணி சேர்ப்பிற்கான பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த வருடமே அதற்குரிய செயற்பாடுகள் முடிவுறும். தற்போது காணப்படுகின்ற அந்த ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையில், ஐம்பது சதவீதமான ஆளணிப் பற்றாக்குறை இந்த வருடத்திற்குள்ளேயே நிரப்பப்படும். அதேவேளை, அந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் நாங்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.