எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்க பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி, நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
முந்தைய காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகக் காணப்பட்டதுடன், மக்கள் கிணற்று நீரை நேரடியாகவே பருகி வந்தனர். ஆனால் தற்போது, குடிநீருக்காகப் போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
1950களுக்குப் பின்னர் நிலத்தடி நீரை உறிஞ்சும் குழாய்க் கிணறுகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளமை, முறையற்ற விதத்தில் அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டமை மற்றும் கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலக்கின்றமை போன்ற காரணங்களால் நீரின் தரமும் அளவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகளும், முறையான கண்காணிப்பு வழிமுறைகளும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இதனைச் சாத்தியமாக்க உரிய தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர் மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க முறையான முகாமைத்துவ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும். விழிப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலச் சந்ததியினருக்காக நமது நீர் வளங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.