வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றிய உணவகம் மீது பிரதேச சபை நடவடிக்கை!!!

பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்தியில் காணப்படும் வெள்ளநீர் வடிகால் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையிலான சபை அணியினர் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டனர்.

மிகக் கடுமையான வெப்பமான காலநிலை நிலவிய நிலையில், குறித்த பகுதியில் அமைந்திருந்த ஏனைய வடிகால்கள் நீரின்றி காணப்பட்ட போதிலும், ஒரு அசைவ உணவகத்திற்கு முன்பாக அமைந்திருந்த வடிகால் மாத்திரம் நீர் நிரம்பிய நிலையில், மிகவும் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த அசைவ உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை மிகவும் சூட்சுமமான முறையில் வடிகாலுக்குள் செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தவிசாளரின் பணிப்பின் பேரில், கழிவுநீரை வடிகாலுக்குள் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதி உடைக்கப்பட்டு, கழிவுநீர் வடிகாலுக்குள் விடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த உணவகத்தை மூடுவதற்கும், கழிவுநீரை வடிகாலுக்குள் விடும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி உரிய முறையில் சரிசெய்வதுடன், சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளான வடிகால் பகுதியை குறித்த உணவகத்தினரே முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், குறித்த உணவகம் அதன் உரிமையாளரினால் மூடப்பட்டுள்ளது.

Related Posts