நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 80,000 முதல் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பெருமளவிலான துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களிடம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவித்த போது, சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் நாட்டிலுள்ள குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித சலுகையும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து பாதாள உலகக் குழுக்களுக்காக 5,000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றைக் கொண்டு வரும் ஐந்து கடல் வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இந்த ஆயுதங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படும் கடல் வழித்தடங்களை இலக்காகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளை நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் இவற்றில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு சட்டவிரோத துப்பாக்கிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளதால் அவற்றைக் கண்டறிந்து கையகப்படுத்துவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஜூலை 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 3,100க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் அதிகளவான துப்பாக்கிகள் 2025ஆம் ஆண்டிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் மொத்தம் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.