இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களிடமிருந்து பணம் வசூலித்த இருவர் நேற்றுமுன்தினம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீட்டுடன் இஸ்ரேலில் வழங்கப்படும் கட்டுமானம் மற்றும் உணவகத்துறை வேலைவாய்ப்புகளைத் தங்களால் பெற்றுத்தர முடியும் எனக் கூறி, இஸ்ரேல் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பணியக வளாகத்தில் காத்திருந்தவர்களிடம் இருவர் பணம் வசூலித்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தள பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் மற்றைய சந்தேகநபர் பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்தபோது அவர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள் மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்கள் சிலரை பல தடவைகள் பணியகத்திற்குள் அழைத்து வந்து தங்களால் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனி மெணிக்கே என்ற பெண்ணொருவர் இந்த சந்தேகநபர்கள் இருவரையும் வழிநடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.