நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை நிலவும் காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாதாந்தத் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், பிப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும் இனங்காணப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 4,292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியான தரவுகளின்படி, நாட்டின் மொத்த நோயாளர்களில் 52.93% பங்களிப்புடன் மேல் மாகாணமே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 47,445 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 13,302 பேரும், மத்திய மாகாணத்தில் 7,971 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,383 பேரும், வடமேல் மாகாணத்தில் 4,465 பேரும், கிழக்கு மாகாணத்தில் 3,703 பேரும், ஊவா மாகாணத்தில் 2,482 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,574 பேரும், வட மாகாணத்தில் 1,314 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்தப் பாதிப்பில் 21.27% ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 17,765 நோயாளர்களும் (கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,613 பேர்), கண்டி மாவட்டத்தில் 6,366 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,953 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,841 பேரும், காலி மாவட்டத்தில் 4,936 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,860 பேரும் பதிவாகியுள்ளனர்.
தற்போது டெங்கு மரண விகிதம் 0.07% ஆகக் காணப்படுகின்ற அதேவேளை, நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.