11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரியில்!

இலங்கை சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்யும் 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் முன்னேற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 11ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஜனவரி மாதம் 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விளையாட்டு வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

11ஆவது சாரணர் ஜம்போரியை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள், அதன் தற்போதைய முன்னேற்றம், அரச மற்றும் அரை-அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதான சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் கே.பி. யோகசந்திர, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கிரிஷாணி சி. விதானகே, ஜனாதிபதியின் உதவிச் செயலாளரும் இலங்கை சாரணர் இயக்கத்தின் விசேட ஆணையாளருமான சமித் தலகிரியாவ, ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் கசுன் ரத்நாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம் மற்றும் சேவைகள்) பி.டி.எம்.ஜே.பி. திசாநாயக்க உட்பட நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Related Posts