தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கபடி பெண்கள் அணிக்கு கெளரவிப்பு!

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் இம் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றதற்கு அமைவாக, இவ் போட்டித் தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் நேற்றைய தினம் (15.07.2026) கெளரவிக்கப்பட்டார்கள்.

இதன் போது அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய இளைஞர் மன்றத்தினால் தேசிய ரீதியாக நடைபெற்ற 36 ஆவது தேசிய போட்டித்தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தினை பெற்றமை மகிழ்வான விடயம் எனவும், அதிலும் கொழுப்பு மாவட்டத்தில் இரு அணிகள் உள்ளடங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து ஒவ்வொரு அணி என்ற ரீதியில் 26 அணிகள் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளமை பாராட்ட வேண்டிய விடயம் எனவும், மேலும் கபடி இறுதிப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியினர் பங்குபற்றி இருந்தார்களெனவும், அந்த வகையில் முதலாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும் இரண்டாவது இடத்தினை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளமைக்கு இவ் விரண்டு மாவட்ட அணி வீராங்கனைகளுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இப்போட்டிக்கு உறுதுணையாகவிருந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி அவர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்க அதிபர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது இளைஞர் யுவதிகள் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்தி இளைஞர்களுக்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டதுடன், கபடி போட்டிக்கு நீண்ட காலப் பயிற்சி அவசியம் எனவும், அந்த வகையில் எமது மாணவர்கள் இப்பயிற்சியின் சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு பெற்றோர்களும் தமது பங்களிப்பினை வழங்கி உள்ளார்கள் எனவும், ஆதலால் மாணவர்கள் கல்வி நிலையிலும் உயர்வு அடைய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன், தேசிய போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளிலும் எமது மாணவிகள் பங்குபற்றி சாதனைகள் நிலைநாட்ட வேண்டும் எனவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்ட அணியில் உள்ள செல்வி வி. டிலக்சஷா மற்றும் செல்வி ஆர். பிரியவர்ணா ஆகியோர் இலங்கை தேசிய கபடி மகளிர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் குறித்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி சிறிமேனன், பயிற்றுனர்கள் யாழ். மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து வெற்றி ஈட்டிய வீராங்கனைகள் அவர்தம் பயிற்றுனர்கள் அரசாங்க அதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.

Related Posts