ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு???

ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மீரிகம வைத்தியசாலையின் புதிய சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழில் வல்லுநர்களால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய இந்த கோரிக்கைகளை பரிசீலித்து அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர்,

ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதாரத் துறை சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.

சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கோரிக்கைகளை நாம் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts