நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை ஆராய்வதற்கும் நோக்கமாக “ஊராட்சி முற்றம்” எனும் ஒருங்கிணைப்புக் கூட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நல்லூர் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நல்லூர் பிரதேச செயலகம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், இலங்கை மின்சார சபை, விவசாயத் திணைக்களம், தபால் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், இலங்கை காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையாற்றும் அனைத்து திணைக்களங்களும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்படுவதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது. பிரதேசத்தில் காணப்படும் திணைக்கள ரீதியான பிரச்சினைகளை விரைவாகவும் திறம்படவும் தீர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்களும், செயலாளர் திரு. யு. ஜெலீபன் அவர்களும் விரிவாக கருத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது:
- பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
- வீதிப்போக்குவரத்து ஒழுங்குகளை வலுப்படுத்துதல்.
- டெங்கு மற்றும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்.
- வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான கட்டுமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்.
- வாழ்வாதார உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள்.
குளங்கள் பராமரிப்பு மற்றும் பாதீனியம் (Parthenium) ஒழிப்பு நடவடிக்கைகள். - அம்மாச்சி உணவக வீதிப் பகுதி ஒழுங்குபடுத்தல்.
- விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளின் கண்காணிப்பு.
- வீதியோரங்களில் தொடர்ச்சியாக அசுத்தம் ஏற்படுத்துபவர்களை இனங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- பாதசாரி கடவைகளை பாதுகாப்பாக பராமரித்தல்.
- சட்டவிரோத கட்டுமானங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படுவதைத் தடுத்தல் அல்லது கட்டுப்படுத்தல்.
- பொது வீதிகளில் காணப்படும் மரங்களை வெட்டுதல் மற்றும் கிளைகளை அகற்றுதல் தொடர்பாக திணைக்களங்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.
- சுற்றுச்சூழல் கண்காணிப்பு பிரிவின் ஊடாக சட்டவிரோத கழிவகற்றல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்.
- பிரதேச சபையால் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல்.
- சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு காவல்துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
பிரதேச மக்களுக்கு விரைவான, திறமையான மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் நோக்கில், எதிர்காலத்திலும் இவ்வாறான ஒருங்கிணைப்புக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.