இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான (SSP) மனோஜ் ரணகலா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவரது தகவலின்படி,

2026 ஜனவரி 1 முதல் ஜூலை 5 வரை 1,355 உயிரிழப்பு ஏற்படுத்திய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வீதி விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 108-ஆலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 110-ஆலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை மிகுந்த கவலைக்குரியது என்று குறிப்பிட்ட அவர், வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக சாரதிகளின் கவனக்குறைவு, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், மோசமான வீதி நிலைமைகள் மற்றும் வாகனங்களைப் போதிய அளவில் பராமரிக்காததால் ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் ஆகியவை அமைவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, இவ்வருடத்தில் இதுவரை 488 மோட்டார் சைக்கிள் சாரதிகளும், 484 பாதசாரிகளும் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்

Related Posts