முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் 14ஆம் கட்டைப் பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் மற்றும் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் சேதம் விளைவித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நெல் மூடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒரு அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும்கூட, இப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை, அங்கிருந்த நெல் மூடைகளை இழுத்துப்போட்டு, உடைத்து நாசம் செய்துள்ளதுடன், அவற்றை உண்டும் சென்றுள்ளது.
இந்த நிலையில், இன்று (03.07.2026) அதிகாலை வேளையில் ஒட்டுசுட்டான் 14ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்குள் காட்டுயானை ஒன்று புகுந்துள்ளது.
அங்கு நெல் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறையின் கதவை உடைத்துத் துவம்சம் செய்த யானை, உள்ளே வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளில் 6 மூடைகளை இழுத்து எடுத்து, நாசப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அரங்கேறி வரும் இக்காட்டுயானையின் அட்டகாசம் காரணமாகத் தங்களது வாழ்வாதாரமும், உடைமைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதற்குரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு காட்டுயானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.