எனது உயிருக்கு தமிழரசுக் கட்சியால் அச்சுறுத்தல்: சபாநாயகரிடம் அர்ச்சுனா எம்.பி. அவசர கோரிக்கை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களை சந்திப்பத்தில் எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கூறி வருகின்றேன். ஆனால் அது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.கவனம் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி தொடர்பிலும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் நான் ஒருபோதும் அதனை முறையற்ற வகையில் பயன்படுத்தியதில்லை.

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது . இது தொடர்பில் நான் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்கின்றேன். தமிழரசுக் கட்சியினாலும் சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாலும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.இதனால் நான் பாராளுமன்றம் வருவதில் ஒரு மக்கள் பிரதிநிதியாக பொதுமக்களை சந்திப்பதில் அச்சுறுத்தல் உள்ளது.எனவே எனது பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.

Related Posts