வட, கிழக்கில் பெரும் உணர்வெழுச்சியுடன் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நினைவுகூரப்படவுள்ளது .

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பானது, அதிகாரப்பூர்வ நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரலை அறிவித்துள்ளது.இதற்கமைய இன்று காலை 1015. மணிக்கு பிரகடனம் வெளியிடப்படவுள்ளதுடன்,10.29 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 10.31 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படும்.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் ஊர்திப் பயணம், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல், உள்ளூராட்சி சபைகளில் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில மூன்று தசாப்த காலப் போரில் உயிர்நீத்த உறவுகள் நினைவுகூரப்பட்டனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மே 18 ஆம் திகதியான இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்,அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு பொதுச்சுடர் ஏற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.அரசியல் பகுப்பாய்வு

இதுகுறித்துக் கருத்துரைத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னதுரை லியோ ஆம்ஸ்ட்ரோங், இந்நிகழ்வில் கட்சி, இனம்,மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளைக் கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து இத்துயர இன்றைய தினம் நினைவுகூர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அத்தோடு இந்நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன், தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளை வலியுறுத்தும் வகையிலும் இது அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த ஆண்டும் பொதுமக்கள்,சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரே குடையில் கீழ் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வெவ்வேறு பாகங்களிலும் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடற்கரை பகுதியில் இன்று மாலை 05 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மேலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டன்,கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும், தமிழகத்திலும் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Posts