இந்தியாவில் பரவிவரும் நிபா வைரஸ் தொற்றால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

இந்தியாவில் கேரள மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் அந்நாட்டினுள் நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர். இது குறித்து சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில்,
தற்போது இந்தியாவில் பரவிவரும் நோய்த் தொற்றால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அவ்வாறு இந்த வைரஸ் தொற்றால் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களிடையே காலத்திற்குக் காலம் ஏற்படும் வைரஸ் தொற்றுகள் தொடர்பில் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மேற்படி ஆய்வுகளின் ஊடாகப் பெறப்படும் முடிவுகளுக்கமைய அவசியமான சிகிச்சைகள் உடனடியாக முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டுக்கு தற்போது இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எனினும், இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்று குறித்து எவ்வித அச்சங்களும் பொதுமக்களுக்கு ஏற்படத் தேவையில்லை என்றார்.