போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் திங்கட்கிழமை (26) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளே காணப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து இவை மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்றன.
இவற்றை வடக்கிலேயே பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் எம்மிடம் இல்லை. இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
இந்தியாவுடனான விமானச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளமையால் வடக்குக்கு வரும் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்ட பின்னர், நிச்சயமாக அதிகளவான சுற்றுலாவிகள் வருகை தருவார்கள். இதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியடையும்.
முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிடுவதற்குச் சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளது. அரசாங்கத்தால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு’ முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சாதகமான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், கனடாவின் ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நட்புணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அந்த ஒப்பந்தத்தின் கீழான செயற்பாடுகளை மீளவும் வலுப்படுத்துவது தொடர்பில் கரிசனை செலுத்துமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர்,
டித்வா பேரிடர் பாதிப்பு மற்றும் அதிலிருந்தான மீள்கட்டுமானப் பணிகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
வடக்கு மாகாணத்தின் அடிப்படைப் புள்ளிவிவரங்கள், முதலீட்டு வாய்ப்புகள், மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மாகாண அதிகாரிகளால் உயர்ஸ்தானிகருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.