மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – சுகாதார அமைச்சர்

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முறையான திட்டத்தின் கீழ் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்.போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் அமைச்சர் கண்காணித்தார்.

இதன்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், உள்நோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, வைத்தியசாலையின் ஏனைய சிகிச்சை துறைகள் மற்றும் வைத்தியசாலையின் மேம்பாட்டுத் திட்டங்கள் அவற்றின் தற்போதைய நிலை, எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், உள்நோயாளிகளின் நலன் தொடர்பிலும் கேட்டரிந்துக் கொண்டார்.

மேலும் வைத்திய ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் குறிப்பிடுகையில்,

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும். வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு அவசியமான அனைத்து சிகிச்சை சேவைகளையும் முறையாக வழங்கி அவர்களை ஆரோக்கியமான நபர்களாக மாற்றுவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்த நாட்டில் நோய்தாக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரையும் குணப்படுத்துவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் முதல் சுகாதார அமைச்சர் வரையான நாம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆகையால் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம். யாழ்.போதனா வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்துக்கமைய எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts