முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (07) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2024 மார்ச் மாதம், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகள் இட்டதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முகநூல் பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, அவர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், வவுனியாவில் வசித்து வந்த அவர், போராளிகள் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரவிந்தன், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.