ஐ.நா. உயர்ஸ்தானிகரின் நம்பகத்தன்மை சீர்குலையும்; அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்தை உண்மையாக்கும் வகையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செயற்படுவாராயின், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றுமுழுதாக சீர்குலைக்கும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை விஜயம் அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் என்ற பதவியையும், அக்கட்டமைப்பையும் கேள்விக்குரியதாக மாற்றியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

‘எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 60 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பதாக நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாரகள் இணைந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பிவைத்திருந்தனர். அதற்கு முன்பதாக வருகைதரும் பட்சத்தில் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையின் காத்திரத்ன்மையை வலுவிழக்கச்செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘இருப்பினும் அக்கரிசனைகளுக்கு மத்தியில், அவற்றை மீறியே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உயர்ஸ்தானிகர் செயற்படாவிடின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீதான நம்பகத்தன்மை முற்றுமுழுதாக இழக்கப்படும்’ எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Related Posts