காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு தலையீடு செய்யுங்கள்!! தமிழ்த்தேசிய பேரவை வேண்டுகோள்!!

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் பிரதிநிதிகளுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (20) இடம்பெற்றது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரேனோவுடன் மு.ப 9.00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்திலும், இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குடன் பி.ப 1.30 மணிக்கு அமெரிக்கத் தூதரகத்திலும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற்றுடன் பி.ப 3.00 மணிக்கு சுவிட்ஸர்லாந்து தூதரகத்திலும் நடைபெற்ற இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசியப்பேரவையின் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் உறுப்பினர் நடராஜர் காண்டீபன், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின்போது முதலாவதாக வடமாகாணத்தில் உள்ள உரிமைகோரப்படாத சுமார் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் தற்போது அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருப்பது ஏமாற்றுவேலை எனச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதனை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக வெறுமனே 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பான உரித்தை நிரூபிப்பதில் தமிழ்மக்கள் முகங்கொடுத்திருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் பற்றியும் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோன்று காணி உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் உரிமைளயாளர்களிடம் இல்லாத நிலையில், அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அக்காணிகளை சுவீகரிப்பதை நோக்காகக்கொண்டே அரசாங்கம் இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அடுத்ததாக கடந்த ஆட்சியின்போது குருந்தூர் மலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 79 ஏக்கர் காணிக்கு அப்பால், விகாரையை நிர்மாணிப்பதற்கு மேலும் 325 ஏக்கர் காணி தேவைப்படுவதாக அதனுடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் அக்காணிகள் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், அண்மையில் அக்காணியில் விவசாயத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இவ்விடயத்தில் ஜனாதிபதி மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட பௌத்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் அதற்கு முரணாக செயற்படுவது பற்றி விசனம் வெளியிடப்பட்டது.

அதேவேளை தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விகாரை குறித்தும், குச்சவெளியில் 32 சைவ தொல்பொருள் அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்தும் இராஜதந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், தொல்பொருள் அடையாளங்கள் அவ்வாறே தொடர்ந்து பேணப்படவேண்டுமே தவிர, அவற்றை பௌத்தமயப்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும், இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

Related Posts