வடக்கு கிழக்கில் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இன்று (16) இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கிடையில் இரண்டு சந்திப்புக்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தன.
முதலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையிலான கலந்துரையாடல் நடந்தது.
கந்தரோடையிலுள்ள த.சித்தார்த்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செ.கஜேந்திரன், ந.காண்டீபன் உள்ளிட்டவர்கள் பேச்சு நடத்தினர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு அமைப்பதிலுள்ள சிக்கலை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் சுட்டிக்காட்டினர். இரு தரப்பும் இணைந்தால் யாழ்ப்பாணத்திலுள்ள சில சபைகளை மட்டுமே கைப்பற்றலாம் என்றும், வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் தமது உறுப்பினர்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய மூன்று தரப்பும் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்ற யோசனையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்தனர்.
தமிழரசு கட்சியுடன் கூட்டு வைப்பதிலுள்ள கொள்கைரீதியான சிக்கல்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்தனர்.
இருப்பினும், இதுபற்றி தமிழ் அரசு கட்சியுடனும் பேசிவிட்டு பதிலளிக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் சந்திப்பு நடந்தது.
நல்லூரில் உள்ள எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. கட்சித்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் சந்திப்பில் கலந்து கொண்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்து ஆட்சியமைக்கலாமென்ற யோசனையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்த போதும், அது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எந்த கருத்தையும் தெளிவாக குறிப்பிடவில்லை. இந்த விவகாரத்தில் தமக்கு உடன்பாடில்லையென்பதை அவர் பிரதிபலித்திருக்கலாமென நம்பப்படுகிறது.
இதேவேளை, தமிழ் அரசு- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து ஆட்சியமைப்பது பற்றிய கலந்துரையாடலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் நிபந்தனையொன்றை முன்வைத்தனர்.
தாம் தமிழரசு கட்சி ஆட்சியமைக்க வெறுமனே ஆதரவளிக்க முடியாது என்றும், யாழ்ப்பாணத்தில் 3 சபைகளில் தாம் தவிசாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டனர் சாவகச்சேரி பிரதேசசபை, கோப்பாய் பிரதேசசபை, மானிப்பாய் பிரதேசசபைகளை தம்மிடம் ஒப்படைக்க கேட்டனர்.
இந்த பிரதேசசபைகளில் சுமந்திரனின் தீவிர ஆதரவாளர்களை தவிசாளர்களாக்க அவர் திட்டமிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் தம்மால் உடனடியாக பதிலளிக்க முடியாது என்றும், கட்சியின் அரசியல்குழுவில் கலந்துரையாடி பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.