Ad Widget

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!!

யாழ்.காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

நேற்று காலை காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என்பன வந்திறங்கிய நிலையில் காலை 8 மணியளவில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றுக்கு பெட்ரோல் நிரப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது.

டீசல் வழங்குவதற்காக பெட்ரோல் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தோர் எதிர்ப்பு நவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அங்கு வருகை தரவில்லை.

யாழ்ப்பாணம் – காரைநகர் சேவையில் ஈடுபட்ட பேருந்துகளும் தடுத்துநிறுத்தப்பட்டன. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடு திரும்புவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

உள்ளூரில் எரிபொருள் அட்டை பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்க முடியும் என்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து செல்லுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகின்றது.

Related Posts