Ad Widget

இந்தியாவினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் வடக்கில் பகிர்ந்தளிப்பு!

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் வடக்கில் இன்று (திங்கட்கிழமை) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொதிகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்தார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் 25,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவுப்பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 6500 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 65,000 கிலோ உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகத்திற்கும் பொருட்கள் கொண்டுசெல்லப்படவுள்ள நிலையில் நாளைய தினம் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலகங்களுக்கு, உணவுப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Related Posts