இலங்கை மீதான கொரோனாவின் தாக்கம் ; இன்றுடன் ஒருவருடம் நிறைவு!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது.

நாட்டில் கடந்த 2020 ஜனவரி 27 ஆம் திகதி சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இலங்கையில் பதிவான முதல் கொரோனா தொற்று சம்பவம் இதுவாகும்.

சீனப் பெண்ணைத் தொடர்ந்து 2020 மார்ச் 10 ஆம் திகதி 52 வயதான உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானார்.

2020 மார்ச் 28 அன்று கொவிட் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் முதல் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதன்படி மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் கொவிட் தொற்றுக்குள்ளாகி அங்கொட தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

2020 மார்ச் 20 முதல் மே 11 ஆம் திகதி வரை 52 நாட்கள் நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலையில் இருந்தது. இந்த முடக்கல் நிலையானது ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலையும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

அதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கை சிறந்த முறையில் கெவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டையும் பெற்றது.

எனினும் அதன் பின்னர் 2020 ஒக்டோபர் 04 ஆம் திகதி மினுவாங்கொடை கொவிட் கொத்தணிப் பரவல் இலங்கையின் அனைத்து சுகாதார தடுப்பு சுவர்களையும் தகர்த் தெறிந்தது.

எவ்வாறெனினும் இந்த ஒரு வருடக காலப் பகுதிக்குள் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 59,922 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 51,046 பேர் குணமடைந்துள்ளதுடன், அதனால் 288 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

Related Posts