விஜயகலா கூட்டமைப்புடன் இணைகிறாரா? – சுமந்திரன் விளக்கம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளப்போவது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையென கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அது குறித்து சுமந்திரனுடன் பேசியதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘எம்முடன் இணைந்துகொள்வது தொடர்பாக எங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் விஜயகலா எம்.பி. முன்னெடுக்கவில்லை.

எனவே எங்களது கட்சியில் இணைந்து நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாகச் சொல்லப்படுகின்ற செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை.

மேலும் அவ்வாறு எங்களுடைய கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பான எந்தவித தீர்மானங்களும் தன்னிடம் இல்லை என்று அவரும் ஓர் அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். ஆகையினால்தான் எனக்குத் தெரியத்தக்கதாக எங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் அவர் நடத்தவில்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்’ என மேலும் தெரிவித்தார்.

Related Posts