காணாமற்போனோரின் உறவினருக்கு வாழ்வாதாரம்; நெடுந்தீவில் பதிவுகளை ஆரம்பித்தது ஈபிடிபி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீடு தருவதாக கூறி நெடுந்தீவில் உள்ள ஈபிடிபி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறப்புச் சான்றிதழ் மற்றும் வாழ்வாதார உதவிகள் மற்றும் வீட்டுத்திட்டம் என்பன தருவதாக கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் சுமார் 27 பேர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி கடந்த 10 வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இறப்புச் சான்றிதழ் வேண்டாம், நீதி வேண்டும் என கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் இந்த நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தமது உறவுகளை ஏமாற்றி தமது போராட்டங்களை மழுங்கடிக்கச்செய்வதற்கான திட்டம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதிவு எனத் தெரிவித்த போதும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோரும் இந்தப் பட்டியலில் பதிவு செய்வதற்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts