அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது கட்சி அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
“டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட வேண்டும் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்”, “ஆட்கடத்தல்காரன் டக்ளஸ் அரச ஒட்டுக்குழு”, “தமிழரை அழிப்பதில் அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டது ஈ.பி.டி.பி”, “வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்திய ஈ.பி.டி.பியினரையும் கைது செய்”, ஈ.பி.டி.பி என்ற துணை இராணுவக் குழுவே கடத்தலில் ஈடுபட்டவர்கள்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இடம்பெற்றபோது அங்கு இரு வாகனங்களில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மேலும் போராட்டக்காரர்களின் கோஷங்கள் கேட்காமல் இருக்க, கட்சி அலுவலகத்தின் வாயிலில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு சினிமாப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.
மேலும் போராட்டத்தில் ஈடுபடடவர்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளை, மர்ம நபர் ஒருவர் பறித்தமையால் அங்கு சிறிது நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது அங்கு நின்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் குறித்த நபரைப் பிடித்து அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.