காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019”
ஒக்டோபர் 24, 25 ,26 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத், மும்பை போன்ற பெருநகரங்களின் வரிசையில் யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது. இலங்கையில் இருந்து உலகக் கிளைமத்தோன் அலையில் இணையும் ஒரே நகரம் நமது யாழ்ப்பாணமாகும். இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் கிளைமத்தோன் பெருநிகழ்வை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை OMNE (Organic Movement of North and East)மேற்கொண்டது. இதில் டில்மா நிறுவனமும் துணை ஒழுங்கமைப்பாளர்களாக இணைந்துகொண்டது. யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றம், வடக்கு மாகாணத் தகவல் தொழில்நுட்பச் சம்மேளனம், யாழ்ப்பாணப் பயில்களம், United Nations Global Compact– Sri Lanka Network, Biodiversity Sri Lanka ஆகியவர்கள் பிரதான பங்காளர்களாக இணைந்துகொண்டமை இம்முயற்சிக்கு மேலும் வலுச்சேர்த்தது.
பாடசாலை மட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தச் சிறகுகள் அமையமானது கட்டுரை, சித்திரம் மற்றும் விவாதம் போட்டிகளை கிளைமத்தோன் நிகழ்வை முன்னிட்டு ஒழுங்கு செய்தார்கள். இதனால் இம்முயற்சி இளையோர் மட்டத்தில் பரவலாக அறியப்பட்டது.
சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பசுமைச் நிழல்கள், பசுமைச் சுவடுகள், ஒளடதம், பூவன் மீடியா, Zero Plastic Forum, வல்லமை ஆகிய அமைப்புகள் இம்முயற்சியை மக்கள் மட்டத்தில் எடுத்துச் செல்லக் கைகொடுத்ததன் மூலம் இம்முயற்சி கிராமங்கள் வரை எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்வில் இளம் தொழில் முயற்சியாளர்கள், புத்தாக்குனர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய புதுமையான கருத்திட்டங்களை நிபுணர் குழுவிடம் முன்வைக்கவுள்ளார்கள். இங்கு தெரிவு செய்யப்படும் கருத்திட்டங்களுக்குப் பெறுமதியான பரிசுகள் வழங்கப்படுவதோடு 2020 ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெறும் உலகளாவிய போட்டிக்கு (Global Climathon Awards) விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும்.
25 ஆம் திகதி மாலை 3 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும் இறுதி நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் சகலருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும். மேலும் விவாதம், ஆற்றுகை போன்ற அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
சித்திர, மற்றும் புகைப்படக் கண்காட்சியானது மூன்று தினங்களும் காலை 9 மணிமுதல் 3 மணிவரை இடம்பெறும். இதில் பங்குபெற்றும் பாடசாலை மாணவர்கள் தனியாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சித்திரக்கூடத்தில் படங்களை உடன் வரைந்து சமர்ப்பிக்கவும், காலநிலை மாற்றம் தொடர்பான வேறு போட்டிகளிற் பங்கேற்கவும் முடியும். பூமிப்பந்தை காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளில் இருந்து காக்கும் எம் இளையோரின் பல்வேறு செயற்பாடுகளை வெளிக்கொணரும் முயற்சி இது. காலத்தின் தேவையாக அமையும் இப்பணிக்கு வலுவூட்ட 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்கு அண்மையில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்திற்கு உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வாருங்கள்.
எம் இளையோரின் அரும்பணிக்கு அணி சேருங்கள். மேலும் விபரங்களை அறிய 077 809 6226 என்ற அலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.