காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வியங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியாக காணாமல்போனோருக்கான அலுவலகம் வரை செல்லவுள்ளனர்.

அங்கு மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்கள். பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது நூற்றுக்கனக்கான சிறுவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டனர்.

எனினும் அச்சிறுவர்கள் இதுவரையில் மீளக் கையளிக்கப்படவில்லை. இதனால் சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாத நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்கள் கோரி வருகின்றனர்.

இதற்கமைய சிறுவர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளான சிறுவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்ட காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10மணிக்கு இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு’, ‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, ‘பத்துவருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும்?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்றும் இதன்போது வாசிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor