வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்!

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநரிற்கு அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் வடமாகாணத்தில் அதனை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆளுநர், இராணுவத்தின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரால் விடுவிக்க முடியாத காணிகளை இனங்கண்டு அவற்றையும் விடுவிக்க வேண்டும் என்றும் ஆளுநர், இராணுவத்தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துதெரிவித்த இராணுவத்தளபதி, இராணுவத்தின் பாதுகாப்பு தேவைகளுக்காக வைத்திருக்க முடியுமான காணிகள் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்னும் விடுவிக்க முடியுமான காணிகள் இருப்பின் அவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor