யாழ்.பல்கலை. நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டோர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் குறிப்பிட்ட சில பணிநிலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876ம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் உயர்கல்வி அமைச்சிலிருந்து அனுப்பப்படும் சிபாரிசுகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுதல் நடைமுறை ஆகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்த துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், காரணங்கள் எதுவும் இன்றி பதவியிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து அவரது கடமைகளை ஆற்றுவதற்கு உயர்கல்வி அமைச்சருக்குரிய அதிகாரங்களின் படி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் க. கந்தசாமி தனக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைகளை சீர்செய்யும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதனடிப்படையில் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியின் பதவிக்காலம் கடந்த 6ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அவருக்கு ஓகஸ்ட் 7ஆம் திகதியிலிருந்து மேலும் 3 மாதங்கள் பதவி நீடிப்பு உயர் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் கல்விசாரா ஊழியர்களின் பணி நிலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876ம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் உயர்கல்வி அமைச்சிலிருந்து தானே நேரடியாக சென்று பெயர்பட்டியல்களை பெற்று வந்து வெற்றிடங்களை நிரப்பும் பணிகளை தகுதி வாய்ந்த அதிகாரி கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தார்.

அதன் பிரகாரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்ட வேளையில் உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பட்டியலில் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் தவிர்க்கப்பட்டதாக எதிர்ப்பு நிலை எழுந்தது.

உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்து தங்களது பெயர்கள் வராது பாதிக்ப்பட்டோர் தங்களது கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகமோ ஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வராததோடு தங்களது நியாமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை வெளிக்கொணரும் முகமாக சுழற்சி முறையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor