உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர், ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஓமந்தை இறம்பைக்குளம் வரை சென்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், ‘அரசு நீதியை தர வேண்டும் ஓ.எம்.பி வேண்டாம்’, ‘இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே’ எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor