யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் – பிரதமர் உறுதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் இன்று புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டிவைத்தார். இன்று நாம் இதனை பூர்த்தி செய்துள்ளோம்.

இந்த பகுதியில் 200 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. இது மீள் எழுச்சி கிராமமாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. இதனை நாம் பூர்த்தி செய்து தருவோம் வீடு இல்லாப் பிரச்சினை தீர்க்கப்படும்.

2015-2019 ஆண்டு வரை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பில் பல பகுதி விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.

மேலும் யுத்தத்தால் யாழ்ப்பாணம் முற்றாக சீரழிந்தது அந்த யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக ஈடுபடுவேன் என உறுதிபட கூறுகின்றேன்.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் மெல்ல மெல்ல குறுகிக்கொண்டு செல்லுகின்றது அதில் மக்களுக்கான குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன மீள்குடியேற்றத்துக்கான நிதி பெரும்பிரச்சினையாக இருக்கின்றது. அதனையும் நாம் தீர்த்து வைப்போம்.

வன்னி பகுதியில் அபிவிருத்தி திட்டத்துக்கு 14 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளோம். 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தினை யாழ்ப்பாணத்தில் இதுவரை 1500 பூர்த்தி செய்துள்ளோம். மேலதிகமான வீடுகள் உதாகம் திட்டத்தில் அமைத்துக்கொடுக்கப்படும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

Recommended For You

About the Author: Editor