வட- கிழக்கு பெளத்த மயமாக்கல்! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சாட்டையடி கொடுத்த செஞ்சொற்செல்வர்!!

நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனமண்டபத்தில் நேற்ற முன்தினம் வியாழக்கிழமை(08) இரவு அண்மைக்காலத்தில் சைவசமயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்த விசேட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், இந்துசமயக் குருமார்கள், இந்துமதத் தலைவர்கள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வட- கிழக்கில் துரித கதியில் இடம்பெறும் பெளத்த மயமாக்கல் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாகச் சாடி கருத்துக்கள் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கன்னியா வெந்நீரூற்று விவகாரத்தில் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த நிலையில் நீதவானால் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சுமார்- 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீண்டகாலமாகப் பிள்ளையார் ஆலயம் இருந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. மீண்டும் முன்னரிருந்த இடத்தில் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்படாவிடில் குறித்த பகுதியைப் பெளத்தத்தின் அடையாளமாக மாற்றிவிடுவார்கள்.

பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதிக்கு அண்மையில் தற்போது புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு அருகில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தில் இராவணனுக்கும், கன்னியா வெந்நீருக்குமிடையில் காணப்படும் நெருங்கிய தொடர்பு முற்றுமுழுதாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. மாறாக குறித்த பகுதியில் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள வாசகத்தில் கன்னியா வெந்நீரூற்று சிங்கள மன்னன் காலத்துடையது எனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீருற்றைச் சைவமக்களின் வரலாற்றிலிருந்து பெளத்த வரலாறாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வில்கம் விகாரை இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவு கன்னியாவில் இடம்பெறும் பெளத்த மயமாக்கலின் வேகத்தைத் தற்காலிகமாக குறைத்திருக்கிறதே தவிர இதுவே முடிவல்ல.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நானுமிருந்த காரணத்தால் பல்வேறு கஷ்ரங்களுக்கு மத்தியில் சட்டத்துறையை அங்கு ஒரு துறையாக கொண்டு வந்தோம். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையில் 70 வீதமானவர்கள் சிங்கள மாணவர்களாக காணப்படுகிறார்கள். அதேபோன்று விஞ்ஞானத் துறையில் 70 வீதமான சிங்கள மாணவர்கள் காணப்படுகிறார்கள்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பெளத்த மயமாக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கட்டடத்தை நிர்மாணித்தவன் முதலில் புத்தர் சிலையொன்றை கொண்டு வந்து வைத்தான். பின்னர் மூன்று சமயங்களுக்கும் காணிகள் ஒதுக்குவது தொடர்பாக கலந்துரையாடி அதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் சைவக் கோயிலோ, கிறிஸ்தவ ஆலயமோ கட்டப்படவில்லை. ஆனால், அனுராதபுரத்திலிருந்து பிக்குகள் வருகை தந்து வெள்ளைச் சீலை விரித்து பெளத்த விகாரைக்கான அத்திவாரம் இட்டுத் தற்போது நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இதுதொடர்பாகப் பதிவாளருக்கே இன்னும் தெரியாது.

கிளிநொச்சியில் தமிழ்மக்களின் காணியில் தமிழ்மக்களுக்கெனக் கட்டப்பட்ட பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படியொரு சம்பவம் இடம்பெறுகிறது. ஏற்கனவே, குறித்த வளாகத்திற்குள் புத்தர் சிலையொன்று காணப்படும் நிலையிலேயே மீண்டும் இவ்வாறான முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பில் கேள்வி கேட்பதற்கு எவருமில்லை.

மாங்குளத்திலிருந்து பளை- இயக்கச்சி வரை தற்போது பல புத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலை தற்போது தான் உருவாகியுள்ளது. காங்கேசன்துறையை சுற்றிப் புத்த கொயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதகலில் சங்கமித்தை வந்து இறங்கியதாக கூறி பட்டிணத்துக்குப் பெயரை மாற்றியுள்ளனர். ஆனால், அதேபகுதியில் அமைந்துள்ள எமது ஆலயங்களுக்கு மட்டும் ஏன் இன்றுவரை விளக்கு வைக்க அனுமதிக்கிறார்களில்லை? நாவற்குழியில் பெரு விகாரை அமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கென மாதகல் போன்றவிடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் சுக்கிலவாரச் சத்திரத்தை இராணுவத்தினர் தங்களுடைய நடைபாதைப் பயிற்சிக்குரிய இடமாகப் பயன்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கிறீர்களா?

புத்த விகாரைகளுக்குப் பெருமளவு பணம் ஒதுக்கப்பட்டுப் புதுபுதுப்புது விகாரைகள் வட கிழக்கில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மயிலிட்டி, தையிட்டி, வீமன்காமம், காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பல ஆலயங்கள் முற்றுமுழுதாகத் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான ஆலயங்களை மீண்டும் அமைப்பதற்கு ஐந்து அல்லது ஆறு கோடி ரூபா தேவைப்படுகிறது.

ஆனால், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆகக் கூடிய தொகையாகப் பத்து இலட்சம் ரூபா மட்டுமே வழங்க முடியும். முற்றுமுழுதாக அழிவடைந்த ஆலயங்கள் எதுக்காவது முற்றாக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என்றால் எங்கும் அவ்வாறு வழங்கப்பட்டதாக வரலாறில்லை.

பலாலி விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாக விரைவில் தரமுயர்த்தப்படுகிறது. சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் பலாலி விமானநிலையத்தைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீங்களும் இணைந்தே திறக்கப் போகிறீர்கள்?

தற்போது காங்கேசன்துறை சடையம்மா மடத்திற்கு அருகில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த-30 வருடங்களுக்கும் மேலாக சடையம்மா மடத்தில் விளக்கு எரியவில்லை.

மடுவில் ஒருநாள் விளக்கு எரியவில்லையென்றால் நீங்கள் ஏற்பீர்களா? அல்லது பெளத்த விகாரைக்கு இப்படியொரு நிலை ஏற்பட அனுமதிப்பார்களா?

நயினாதீவில் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு 90 சதவீதமான சைவமக்கள் சென்று வழிபடுகிறார்கள். ஆனால், நயினாதீவுக்குச் செல்லும் படகு முதலில் பெளத்த விகாரைக்குத் தான் செல்கிறது. பெளத்தர்கள் படகில் ஏறினால் என்ன ? ஏறாவிட்டாலென்ன? இதுதான் நிலைமை. இதனைக் கூட எங்களால் தடுக்க முடியவில்லையென்றால் சைவமக்கள் அடுத்து என்ன தான் செய்வது?

ஆகவே, இதுபோன்ற பிரச்சினைகளால் தான் நல்லை ஆதீன சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிகள் மற்றும் நாங்களும் இணைந்து எங்கள் கதி இதுதானென இந்தியத் தூதுவராலயத்திடம் மகஜரொன்றைக் கையளித்தோம்.

திருகோணமலை கன்னியா விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து எங்களுக்கு ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்றுத் தந்தமைக்காக உங்களைப் பாராட்டுகின்றோம். ஆனால், இதுவொரு நிரந்தரமான தீர்வா? என்பதில் கேள்வியெழுகிறது.

தனிப்பட்ட வகையில் அறிக்கைகள் விடுவதால் எந்தப் பயனுமில்லை. ஆகவே, தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பயன்படுத்தித் தமிழ்மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் எவ்வாறு தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசரமாக கூடி சைவமக்கள் எதிர்நோக்கியுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும். இந்த விடயத்தில் நீங்கள் முயற்சிகள் முன்னெடுத்தால் நாங்கள் என்றென்றும் அதற்கு நன்றியுடையவர்களாகவிருப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலாநிதி ஆறு.திருமுருகனின் அடுக்கடுக்கடுக்கான கேள்விகள் மற்றும் கடுமையான ஆதங்கங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலையாட்டியவாறு அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் பதிலளித்தார். எனினும், அவரது பதில் மழுப்பலானதாகவேயிருந்தது. பல கேள்விகளுக்கும், ஆதங்களுக்கும் அவரால் உரியவாறு பதிலளிக்க முடியவில்லை.

Recommended For You

About the Author: Editor