வெலிக்கடைக்கு மட்டுமல்ல, செம்மணிக்கும் டக்ளஸ் தேவானந்தா சாட்சி சொல்ல வேண்டும்!! : சிறிதரன்

யாழ் குடாநாட்டில் 3,000 இளைஞர், யுவதிகள் காணாமல் போயுள்ளனர். பலர் செம்மணியிலே புதைக்கப்பட்டார்கள். அதற்கெல்லாம் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்பு கூற வேண்டும். அவரிடமும் அது பற்றியும் விசாரிக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா தனியே வெலிக்கடைக்கு மட்டுமல்லாமல், செம்மணிப் படுகொலை தொடர்பிலும் சாட்சியம் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

கடந்த 31ம் திகதி நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்தார்.

இந்த அரசாலும் எதையும் செய்ய முடியவில்லை கடந்த அரசாலும் எதையும் செய்ய முடியவில்லை. இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்த நாங்கள் அதன்மீது நம்பிக்கையிழந்து போவதற்குரிய வகையிலேதான் அது செயற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

இன்று இந்த நாட்டிலே பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருக்கின்றபோது, அவசரகாலச் சட்டமும் நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே, நாடுபூராகவும் வாழுகின்ற தமிழ் இளைஞர்களுடைய, குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களுடைய நிலைமை இன்னும் மோசமடைந்த நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இந்த நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்திக் கொண்டுவரப்பட்ட இந்த அவசரகாலச் சட்டத்தினுடைய விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இப்போது நாட்டிலே இல்லாத நிலையில், கைதுசெய்யப்பட வேண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில், இந்த நாட்டிலே வடக்கிலும் கிழக்கிலும்தான் அதிகமான இடங்களிலே இராணுவக் காவலரண்களை அமைத்து, மக்களுடைய இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய வகையிலான துரிதமான இராணுவ நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இதனைத் தமிழர்கள்மீதான திட்டமிடப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் மிக ஆபத்தானவை. இவை இந்த நாட்டிலே தமிழ் மக்களுடைய வாழ்க்கை நடவடிக்கைகளை இன ரீதியாகத் தொடர்ந்தும் பாதித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழர்களுடைய நிலங்களைப் பறித்தல், தமிழர்களுடைய இருப்பிடங்களை இல்லாமல் செய்தல், தமிழர்களுடைய தொன்மை அடையாளங்களை அழித்தல், தமிழர்கள் வாழுகின்ற நிலங்களுடைய வளங்களை அபகரித்தல் போன்ற கபளீகர நடவடிக்கைகள் மிகத் துல்லியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அண்மையிலே சில இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் வெளியிலே திரிய முடியாதவாறுகூடத் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 2019.07.20ஆம் திகதி மானிப்பாயில் செல்வரத்தினம் கவிகஜன் என்கிற 23 வயது இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டான். ஆனால், அது தொடர்பான சரியான ஆதாரங்கள், நியாயபூர்வமான ஆவணங்கள் பொலிஸாரால் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகின்ற அதிகாரத்தை மீறி, அவர்களைச் சுட்டுக்கொல்கின்ற அதிகாரத்தை அப்பொலிஸாருக்கு வழங்கியது யார்? தமிழ் இளைஞர்கள் என்றால் அவர்களைக் கண்ட இடங்களிலே சுடலாம், அவர்களை எதுவும் செய்யலாம் என்ற நிலையில்தான் இவ்வாறு அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றான். கண்ட இடத்தில் சுடுகின்ற கட்டளைகளைப் பயன்படுத்தினால், இன்னும் இந்த நாட்டிலே எவ்வளவோ பேரைப் பொலிஸார் சுடுகின்ற நிலைமை ஏற்படும்.

கடந்த 2019.07.16ஆம் திகதி கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள தங்களுடைய வணக்கத் தலத்திற்குப் போவதற்கு மக்கள் சிலர் முயற்சித்தபொழுது, தென்கயிலை ஆதீனம் வணக்கத்துக்குரிய அகத்தியர் அடிகளாரையும் அந்தக் காணி உரிமையாளரான ரமணி அம்மா அவர்களையும், “வாருங்கள்! நாங்கள் கூட்டிக்கொண்டு போய் நீங்கள் வணங்குவதற்கு, நீங்கள் ஆண்டவனைத் தரிசிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகிறோம்” என்று கூறி பொலிஸார் தங்களுடைய வாகனத்தில் அவர்களை அழைத்துச் சென்றபொழுது, சிங்களக் காடையர்கள் சிலர் பொலிஸாரின் முன்னிலையிலேயே அவர்கள்மீது குடித்த எச்சில் சுடு தேநீரை ஊற்றினார்கள். ஏன் அந்த நேரத்தில் பொலிஸாரால் அவர்களைக் கைது செய்ய முடியவில்லை? அப்பொழுது இந்த அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் எங்கே போனது?

நான் குறிப்பிட்ட சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளைஞனுக்குத் தந்தை இல்லை அவரை தாயார்தான் வளர்த்திருக்கிறார். அவர் அந்தத் தாயாருக்கு ஒரேயொரு மகன். இறந்த செல்வரத்தினம் கவிகஜனுடைய உடலைப் பொறுப்பேற்பதற்கு உதவியாக கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 23 வயதுடைய சிவராசா தனூசன், கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்தவர்களான 38 வயதுடைய சிவகடாச்சன் சிவரூபன், 19 வயதுடைய உதயகுமார் கிருணாத், 25 வயதுடைய சபாரத்தினம் வேணுகானன் ஆகியோர் 21ஆம் திகதி தங்களுடைய பெற்றோர்களோடும் அயலவர்களோடும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்குச் சென்றிருக்கின்றார்கள். இவர்கள் அங்கு சென்றபோது, மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்திலே அந்த உடலைக் காட்டுவதாகக் கூறி பொலிஸாரால் நயமாகப் பேசப்பட்டு, அந்த நாலு இளைஞர்களும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இளைய சட்டத்தரணி சயந்தன் அவர்களின் முயற்சியால் அன்றைய இரவு 10.30 மணியளவில் அந்த நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இங்கு என்ன நடந்திருக்கிறது? குறித்த சம்பவத்துடன் எந்தவிதச் சம்பந்தமுமே இல்லாத, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிக்காகச் சென்ற இளைஞர்கள்கூட கைது செய்யப்படுகின்ற ஓர் அகோரமான, அபாயகரமான நிலைமையை இன்று நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான சம்பவங்கள் இந்த அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றை மையமாக வைத்து மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

2019.07.22ஆம் திகதி இரவு இனந்தெரியாத குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நாதன் திட்டம், புன்னைநீராவி என்ற இடத்திலே வசிக்கின்ற 50 வயதுடைய சூசைப்பிள்ளை சகாயராசா, 45 வயதுடைய அவரது மனைவி, 14 வயதுடைய மகன் சகாயராசா சுதர்சன் ஆகிய மூவரதும் கை, வாய், கண்களைக் கட்டி, அவர்களை ஒரு மூலையிலே அடைத்து வைத்துவிட்டு, அவர்களது வீட்டு முற்றத்தில் ஆயுதங்கள் உண்டு என்று சொல்லித் தோண்டி இருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் கிடைக்காத நிலையில், அவர்களை அவிழ்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நேரத்திலே இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மிக அபாயகரமான சூழலை எட்டிச் செல்கின்றது.

அவசரகாலச் சட்டம் தேவை என்று இங்கு சொல்கின்றார்கள். ஆனால், இந்த அவசரகாலச் சட்டத்தின் காரணமாக நடைபெற்ற சம்பவங்கள் பலதை நாங்கள் இந்த இடத்திலே பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது. அண்மைக்காலமாக வடபகுதியிலே பல சூட்டுச் சம்பவங்களும் கைதுகளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வைத்தே நடைபெற்றிருக்கின்றன. 2016.10.20ஆம் திகதி தமது நண்பன் வீட்டுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்று திரும்பிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களான வை. எம். சீ. ஏ. பாரதிபுத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன், யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்து போக்குவரத்துப் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். என்ன நடந்தது? இவர்கள் ஏன் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்? அதற்கான காரணம் என்ன? இதுவரை இந்த நாட்டிலே அதற்கான நீதி கிடைக்கவில்லை.

அதேபோல 2017.01.15ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாக அரசாங்கம் கூறி, உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் போராளிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி, திருவையாற்றைச் சேர்ந்த முருகையா தவேந்திரன், மற்றும் காராளசிங்கம் குலேந்திரன், செம்பியன்பற்று, மருதங்கேணியைச் சேர்ந்த லூயிஸ் மரியநாயகம் அஜந்தன், மன்னாரைச் சோ்ந்த வேலாயுதம் விஜயகுமார், திருகோணமலையைச் சேர்ந்த ஞானசேகரம் ராஜ்மதன் – இவர்கள் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நெருங்குகின்றன. ஆனால், அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள்மீது இதே பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் பாய்ச்சப்பட்டு அவர்கள் சிறையிலே வாடுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேபோல, 2019.01.13ஆம் திகதி கட்டைக்காடு, முள்ளியானையைச் சேர்ந்த கடற்றொழிலாளியான குணபாலசிங்கம் குணசீலன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களைக் கேட்டமைக்காக தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு மறுநாள் 2019.01.14ஆம் திகதி புன்னைநீராவி, விஸ்வமடுவைச் சேர்ந்தவரான புத்தகசாலை உரிமையாளர் கந்தசாமி அரிகரன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களைப் பதிவுசெய்து கொடுத்தமைக்காக தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், அரசாங்கத்தோடு இருப்பவர்கள், அரசாங்கத்தினுடைய ஆதரவைப் பெறுகின்றவர்கள் இந்தப் பாடல்களைப் பகிரங்கமாக ஒலிபரப்புகின்றார்கள்; இந்தப் பாடல்களைக் கேட்கின்றார்கள். அதற்கு இந்த நாட்டிலே தடையில்லை. ஆனால், அப்பாவி இளைஞர்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்தி YouTubeஇலே உள்ள இந்தப் பாடல்களைக் கேட்டால் அல்லது அவற்றைப் பதிவுசெய்தால், அவர்களுடைய சுதந்திரத்தை மீறி, இந்த நாட்டிலே இதே அவசரகாலச் சட்டகத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தி அவர்களைக் கைதுசெய்கின்ற அளவுக்கு நிலைமை சென்றிருக்கின்றதென்பதை இந்த இடத்திலே நாங்கள் பதிவுசெய்ய வேண்டியிருக்கின்றது.

2019.07.17ஆம் திகதி நாதன் திட்டம், புன்னைநீராவியைச் சேர்ந்த 25 வயதுடைய இரவிச்சந்திரன் பகீரதன் என்பவரை, தமிழீழ விடுதலைப் புலிகளுடைய பாடல்களைக் கேட்டமைக்காகத் தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்து, 3 மணித்தியாலங்கள் விசாரணை செய்ததன் பின்னர் விடுதலை செய்திருக்கிறார்கள். இப்போதைய இலத்திரனியல் உலகத்திலே இணையத்தளங்களில் இவற்றை மிக இலகுவாகக் கேட்கமுடியும். ஆனால், இவர்கள் இவ்வாறு இந்தப் பாடல்களைக் கேட்டாலே கைதுசெய்யப்படுகின்றார்கள். இதைக்கூடக் கேட்காதவாறு அவர்களைத் தடுக்கின்ற வகையிலே குறித்த விடயங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த நாட்டிலேயுள்ள இளைஞர்களுடைய சுதந்திரத்தைப் பறிக்கின்றது என்பதை நான் இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

இந்த நாட்டிலே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் 40 வருடங்களாகியும் நீக்கப்படவில்லை. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குக் கீழேதான் 1978ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; காணாமல் போயிருக்கின்றார்கள்; அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்தச் சட்டத்தினூடாக ஏதாவது நீதி கிடைத்திருக்கின்றதா என்றால், அது இந்த நாட்டில் இல்லை என்றுதான் சொல்லலாம். மிக முக்கியமாக, இந்த நாட்டில் இதே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வைத்து மனித உரிமைகளை மீறிய இராணுவத்தினர்மீதோ அல்லது பொலிஸார்மீதோ உரிய நடவடிக்கைகளோ அதற்கான சட்ட ஏற்பாடுகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நாட்டிலே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குகின்றோம் என்று இந்த அரசு பல உறுதிமொழிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருந்தது; ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியிருந்தது; அமெரிக்காவிற்கு வழங்கியிருந்தது; பல அயல் நாடுகளுக்கும்கூட வழங்கியிருந்தது. ஆனால், இன்றுவரை நாட்டில் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. இந்த மிகக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்மூலம் தமிழ் மக்கள் சொல்ல முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மிக முக்கியமாக, திருகோணமலையிலே காணாமற்போன 5 மாணவர்களுடைய விடுதலை தொடர்பான வழக்கு நடைபெற்றபொழுதே, சம்பந்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள்மீதான குற்றங்கள் சொல்லப்பட்டுங்கூட அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால் இதுவா இந்த நாட்டினுடைய நீதி? நீதி என்பது எந்த வகையிலே இந்த மக்களுக்குக் கிடைக்கவிருக்கின்றது? எவ்வாறு இந்த நீதி தமிழ் மக்களுக்குக் கிடைக்கும்?

இந்த மண்ணிலே பல்வேறுபட்ட இனப் படுகொலைகள் நடைபெற்றிருக்கின்றன; பல இளைஞர்கள் காணாமற் போயிருக்கின்றார்கள். பலரை அவர்களுடைய பெற்றோர்களே இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் 800 நாட்களைக் கடந்து இன்றும்கூடப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்த அரசாங்கம் அதனை எள்ளளவும் கருத்திலெடுப்பதாக இல்லை. அது வேண்டத்தகாத அல்லது கருத்திலெடுக்கப்பட முடியாத விடயமாகவே இருக்கின்றது.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலே இலங்கைமீதான பிரேரணை கொண்டுவரப்பட்டபொழுது, அப்பொழுதிருந்த வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் “நாங்கள் இதனை விசாரிக்கின்றோம்; ஒரு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குகிறோம்; வெளிநாடுகளைச் சோ்ந்த சட்டவாளர்கள், நீதியாளர்கள், Technical Assistant ஆகியோரின் உதவிகளைப் பெறுகின்றோம்” என்றெல்லாம் உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், எந்த உத்தரவாதமும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை; எந்த நகர்வும் முன் கொண்டுசெல்லப்படவில்லை; அவர்களுக்கான தீர்வும் கிடைக்கவில்லை. இன்று அது கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது. உலகத்திலே மனித உரிமைகளுக்காகப் பேசுகின்ற அதியுச்ச சபையான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்கூட மௌனம் சாதிக்கின்றதா? அல்லது தமிழர்கள் சார்பிலே அது துரோகத்தை இழைக்க விழைகிறதா? என்ற கேள்வி இன்று ஒட்டுமொத்தத் தமிழ் மக்களிடமும் இருக்கின்றது. உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களும் சரி, ஈழத்திலே வாழ்கின்ற தமிழர்களும் சரி, அவ்வாறான நிலையில்தான் இருக்கின்றார்கள்.

இந்த மண்ணிலே அவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மனித இனப்படுகொலையினுடைய உச்சம் 2008 – 2009 காலப்பகுதியிலே இந்த உலகமே வெட்கித் தலைகுனியக் கூடியளவுக்கு நடந்திருந்தது. அவ்வாறான ஒரு மனிதப் பேரவலத்தை, மனிதப் படுகொலையைக் கண்ட இந்த உலகத்தினுடைய கண்கள் ஏன் இன்று மூடிக்கிடக்கின்றன? என்ற வினாதான் இன்று தமிழர்களிடம் எழுந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினது 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்கள்கூட இன்று கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. உலகத்திலே எந்த மூலையிலும் யாரும் அழிக்கப்படலாம், வல்லமையுள்ளவன் வல்லமை குறைந்தவனை அழித்துவிடலாம், அவனை இல்லாமற் செய்துவிடலாம் என்ற நிலைமையே இன்று காணப்படுகின்றது.

1990களில் யாழ்ப்பாணத்தில் 22 இளைஞர்களை இராணுவத்தினர், குறிப்பாக இராணுவ அதிகாரிகள் கைதுசெய்துகொண்டு சென்றனர். 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் படைமுகாமில் இராணுவ அதிகாரியாக இருந்த துமிந்த ஹெப்பிட்டிவெலான தலையிலான படையினர் கைது செய்த 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றபொழுது, இவர்கள்மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாமென மேலதிக சொலிஸிடர் ஜெனரால் சஞ்சய் ராஜரட்னம் உயர் நீதிமன்றில் நேற்று ஒரு சமர்ப்பணத்தை முன்வைத்தார். தமிழர்கள்மீதான படுகொலைகள் நடைபெறுகின்றபோது அந்தப் படுகொலைகளை மூடி மறைப்பதற்காகப் பல விடயங்கள் கையாளப்படுகின்றன. இந்த வழக்கினை மனுதாரர்கள் சார்பிலே சட்டத்தரணி எஸ். சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் அவர்கள் ஏற்று நெறிப்படுத்தியிருந்தார். இது மிக முக்கியமான ஒரு வழக்கு. 1996ஆம் ஆண்டு 22 இளைஞர்கள் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியக்கூடியதாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் எங்கே என்று யாருக்கும் இன்றுவரை தெரியாது. இந்த நிலையிலேதான் அவர்களில் 3 பேருடைய குடும்பத்தினர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த வழக்குத் தொடர்பில் இராணுவ அதிகாரிகளை விசாரிக்க வேண்டாமெனச் சட்ட மாஅதிபர் திணைக்களம் கூறுகிறதென்றால், இந்த நாட்டினுடைய நீதித்துறை எங்கே செல்கிறது? நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் எங்கே செல்கிறது? இந்த நாட்டினுடைய ஜனநாயகம் என்ன பண்பைக் கொண்டிருக்கின்றது? இந்த விடயங்கள் மிக முக்கியமானவை.

இந்த நாட்டிலே சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்களுக்கு ஒரு நீதி, முஸ்லிம் மக்களுக்கு ஒரு நீதி, பறங்கியர்களுக்கு ஒரு நீதி என்று இருக்கக்கூடாது. இந்த நாடு நியாயாதிக்கமுள்ள நாடு என்பதைச் சரியான முறையிலே இவர்கள் நிரூபிக்கத் தயாராக வேண்டும். 2008, 2009களில்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்; இன்றுவரை எங்கே என்று தெரியாது. கண்கண்ட சாட்சியாகத் தங்களுடைய பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர் இன்று தொடர்ச்சியாக 905 நாட்களுக்கு மேலாகப் போராடுகிறார்கள். அதேபோல, தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த மனைவிமார் போராடுகிறார்கள். பல பிள்ளைகள் அநாதைகளாகப் போராடுகின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலே இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம்வரை சென்றும் உலகம்கூட திரும்பிப் பார்க்காத நிலையிலே இந்தத் தமிழினத்தினுடைய வரலாறு போய்க்கொண்டிருக்கின்றது என்பதுதான் மிகவும் வேதனையான ஒரு விடயம். இந்த அரசாலும் எதையும் செய்ய முடியவில்லை; கடந்த அரசாலும் எதையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்த நாங்கள் அதன்மீது நம்பிக்கையிழந்து போவதற்குரிய வகையிலேதான் அது செயற்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கு நல்லாட்சியிலே தீர்வு வருமென்று சொன்னார்கள். ஆனால், இதுவரை அந்தத் தீர்வுக்கான எந்தவொரு சிறிய முன்னேற்றத்தைக்கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதைவிட வன்னிப் பெருநிலப் பரப்பிலே நடந்தேறிய யுத்தம் தமிழின அழிப்புக்கானது என்பதைச் சர்வதேச சமூகம் ஏற்றுள்ளபோதிலும், தமிழினத்துக்கு ஏற்பட்ட பேரிழப்புக்களுக்கும் அவலங்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை நடுநிலை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறான ஒரு நிலைமைதான் இன்று காணப்படுகின்றது. அதனைவிட, இன்னும் தமிழர்களை மனோரீதியாக, உளரீதியாகத் துன்பப்படுத்தும் வகையிலே, அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்திலே புத்த பகவானுக்குச் சிலை அமைக்கின்றார்கள். தமிழ் மக்களுடைய இடங்களை ஆக்கிரமித்து, அந்த இடங்களிலே பௌத்தர்கள் வாழ்ந்ததாகக் காட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள். இதுகூட, தமிழ் மக்களை உடல், உள ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கச் செய்கின்றது.

இந்த நாட்டிலே கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடைச் சிறையிலே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட 53 போராளிகள் மற்றும் வன்முறையின்போது கொல்லப்பட்ட மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொடர்பிலும் அவர்களுடைய சொத்தழிவுகள் தொடர்பிலும் என்ன நீதி கிடைத்தது? என்று கடந்த 23ஆம் திகதி நான் இந்தப் பாராளுமன்றத்திலே கேட்டிருந்தேன். அதாவது, இந்தப் படுகொலைகள் தொடர்பில் நீதியைக் கேட்டிருந்தேன். அதற்கு மறுநாள் – 24ஆம் திகதி, அந்த நேரம் வெலிக்கடைச் சிறையிலே தானும் இருந்ததாகவும் இந்தச் சம்பவத்தின்போது தான் எதிர்த்துப் போராடியதாகவும் அந்தக் கைதிகளைக் கொல்ல வந்தவர்களோடு சண்டையிட்டதாகவும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுபற்றிய ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டால், சாட்சியம் வழங்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அது நல்லதொரு விடயம். அவரைச் சாட்சியத்துக்கு அழையுங்கள்! 2006 – 2007களில், அதனைவிட 2008, 2009ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,000 இளைஞர், யுவதிகள் காணாமல்போனார்கள்; யாழ்ப்பாண மாவட்டத்தைச் சோ்ந்த பலர் செம்மணியிலே புதைக்கப்பட்டார்கள். அதற்கெல்லாம் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்பு கூற வேண்டும். அவரிடமும் அது பற்றியும் விசாரிக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா தனியே வெலிக்கடைக்கு மட்டுமல்லாமல், செம்மணிப் படுகொலை தொடர்பிலும் சாட்சியம் வழங்க வேண்டும். 1990களில் யாழ்ப்பாணம் மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு போன்ற பிரதேசங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித் தனியாகச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இன்றும் அவர்களுடைய எலும்புக்கூடுகள் மண்டைதீவுக் கிணறுகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த மக்கள் இடம்பெயர்ந்து, அழுதுகொண்டு ஓடினார்கள். அப்பொழுது டக்ளஸ் தேவானந்தா இராணுவ ஒட்டுக்குழுவாகச் செயற்பட்டார். அவரிடம் அந்த மக்கள், “எங்களுடைய பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!” என்று கேட்டிருந்தார்கள். “பிள்ளைகளின் விபரங்களைக் கொடுங்கள். நான் பெற்றுத் தருகிறேன்” என்றார்.

அதாவது, அப்போதிருந்த பிராந்தியத் தளபதி டென்சில் கொப்பேகடுவோடு கதைத்துப் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது பற்றியும் அவரிடம் விசாரிக்க வேண்டும். ஏனென்றால், அவர் அதற்குக் கண்கண்ட சாட்சியம்! வெலிக்கடை படுகொலைகளுக்கு எவ்வாறு டக்ளஸ் தேவானந்தா சாட்சியோ, அதேபோல செம்மணிப் படுகொலைகளுக்கும் அவர் சாட்சி. அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு போன்ற இடங்களில் நடந்த படுகொலைகளுக்கும் அவர் சாட்சி. இவை தொடர்பிலும் அவரிடம் சாட்சியங்கள் பெறப்படவேண்டும்.

நான் OMP அலுவலகத்திலே அல்லைப்பிட்டி, மண்டைத்தீவுப் படுகொலைகள் தொடர்பான ஆவணங்களோடு எனது சாட்சியத்தை வழங்கியிருந்தேன். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. OMP என்பது, காணாமலாக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட ஓர் அலுவலகம். ஆனால், அது எந்த அதிகாரமும் இல்லாமல், வலுவில்லாமல் கிடப்பிலே இருக்கிறது. அதனால், எதுவும் செய்யமுடியாது. இதனைச் சர்வதேச சமூகம் புரிந்துகொள்கிறது. இதனால்தான் வலிந்து காணமலாக்கப்பட்டவர்களுடைய உறவுகள் OMP வேண்டாம் என்று சொல்கின்றார்கள். அது ஒரு நியாயமான நிலைப்பாடு. சர்வதேச விசாரணை அல்லது சர்வதேச நாடுகளுடைய மேற்பார்வையின்கீழ் விசாரணை நடந்தால் மட்டும்தான், தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்த மக்கள் கொண்டிருக்கிறார்கள். இந்த OMP என்பது நம்பிக்கையற்றது என்ற நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். காரணம், இலங்கையிலே அதற்கு எந்த அதிகாரமுமில்லை. அதனுடைய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரியிருக்கிறார்கள். ஆனால், இன்று எத்தனையோ நாட்களாகியும் அதற்குரியவர்களைக்கூட நியமிக்கவில்லை. ஏனைய மாவட்டங்களில் இந்த அலுவலகம் திறக்கப்படவில்லை. அங்கெல்லாம் இனிமேல்தான் அலுவலகம் திறந்து, இனிமேல்தான் விசாரணைகள் மேற்கொண்டு, இனிமேல்தான் தீர்வுக்குத் தயாராவார்கள் என்றால், எத்தனை ஆண்டுகள் இந்த மண்ணிலே இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அலைக்கழிக்கப்படப்போகிறார்கள்?

இவர்களுக்கு நீதி தருகிறோம் என்று கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ – LLRC நியமிக்கப்பட்டது. இந்த LLRC இனால் என்ன நடந்தது? அவர்கள் விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையும் அழைத்தார்கள். இன்னொரு பகுதியில் இராணுவம் கொட்டில்களைப் போட்டு அங்கே வாருங்கள் என்று அழைத்தார்கள். அங்கேயும் விசாரித்தார்கள்; இங்கேயும் விசாரித்தார்கள். இதுவரை நீதி கிடைக்கவில்லை. LLRC ஆணைக்குழுவிலே இருந்த நீதிபதிகள் ஒன்றுகூடி, “இந்த நாட்டிலே ஓர் இனப்பிரச்சினை இருக்கிறது, இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும், இங்கு தமிழ் மக்கள்மீது வலுக்கட்டாயமாகப் போர் புரியப்பட்டிருக்கின்றது; அதற்கு விசாரணை வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்ற விடயங்களை முன்வைத்தார்கள். “செவிடன் காதில் ஊதிய சங்கு போல” மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இதனைக் கிடப்பிலே போட்டது.

அதற்குப் பின்னர், பரணகம தலைமையிலே ஜனாதிபதி ஓர் ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழு என்ன செய்தது? அதிலும் ஆடு தரவா, கோழி தரவா? என்று மக்களைப் பார்த்துக் கேட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளை இழந்து நின்ற மக்களைப் பார்த்துக் கேவலமாக “ஆடா, கோழியா கேட்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதன்பிறகு, அவர்களும் அதனைக் கைவிட்டார்கள். இப்பொழுது, நல்லாட்சி வந்ததாகச் சொல்கிறார்கள். மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இணைந்தும் இந்த மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. இன்றும், 106க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். “60 – 65 வயதுக்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்கின்றோம்” என்றார்கள். கண்டி தலதா மாளிகையினுடைய குண்டுவெடிப்போடு சம்பந்தப்பட்டதாகச் சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டிருக்கின்ற நவரட்ணம் ஐயா என்பவர் 60 வயதுக்கு மேற்பட்டவர். இன்று ஓர் இயலாத நபராக, நோய்வாய்ப்பட்டவராக இருக்கின்றார். ஆனால், அவரை விடுதலை செய்ய இந்த அரசாங்கம் தயாராக இல்லை. அவர் எதுவும் அறியாத நிலையில் அவர்மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு இன்றும் சிறையிலே இறந்துகொண்டிருக்கின்றார். ஏற்கெனவே, கடந்த வாரங்கூட கதிர்காமர் கொலை வழக்கிலே சம்பந்தப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

ஒருவருக்கு ஒரு நீதி, இன்னொருவருக்கு வேறொரு நீதியாக இந்த நாட்டினுடைய நீதிகூட கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது. சிங்கள மக்களுக்கு ஏதும் ஆபத்து, பாராளுமன்றத்திலே சிங்கள மக்களுக்குரிய பிரச்சினை, சிங்களத் தலைவர்களுக்குப் பிரச்சினை என்றால், நீதித்துறை சரியாகச் செயற்படுகின்றது; அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் நீதி நிலைநாட்டப்படுகின்றது. ஆனால், இந்த நாட்டிலே தமிழர்கள் அழிக்கப்படுகின்றபொழுது, அவர்கள்மீது வன்முறைகள் புரியப்படுகின்றபொழுது, அவர்கள் கொலை செய்யப்படுகின்றபொழுது, சம்பந்தப்பட்டவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கும் நீதி வழங்குவதற்கும் நீதிமன்றங்கள் தயங்குகின்றன. ஏற்கெனவே நான் சொன்னதுபோல, அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, 24 இளைஞர்கள் மீதான நாவற்குழிப் படுகொலை தொடர்பான வழக்கிலிருந்து அங்கிருந்த நீதிபதிகளில் ஒருவர் தானாகவே விலகிச்சென்றார். அவ்வளவுதூரம் அவரிடம்கூட தன்னுடைய மக்கள், தன்னுடைய சிங்கள நாடு, தான் ஒரு பௌத்த சிங்களவன் என்ற எண்ணம் மேலோங்கிக் காணப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழர்மீதான கொலையை விசாரித்துத் தீர்ப்பு வழங்கமாட்டேன், தமிழர்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லை என்ற அடிப்படையில் அந்த நீதிபதி வெளியேறினார். இது நியாயமா? இந்த நாட்டினுடைய நீதி எங்கே? இங்கு யாருக்கு நீதி கிடைக்கும்? யார் நீதியின் அடிப்படையில் நடத்தப்படப் போகின்றார்கள்?

நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் பலமுறை பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றோம்; பல விடயங்களை முன்வைத்திருக்கின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொருவருடைய கண்ணீரும் – கனதியான அழுகைகளும் இந்த நாட்டை நிம்மதியாக இருக்கவிடாது. இதனை நீங்கள் சிந்தியுங்கள்! அது மஹிந்த ராஜபக்ஷவாக இருக்கலாம் அல்லது கோத்தாபய ராஜபக்ஷவாக இருக்கலாம் அல்லது எதிர்கால ஜனாதிபதிக் கனவோடு உலாவருகின்ற மஹிந்த ராஜபக்ஷவினுடைய மகன் நாமல் ராஜபக்ஷவாக இருக்கலாம், நீங்கள் யாராக இருந்தாலும் எங்கள் மக்களுடைய கண்ணீரும் அவர்களுடைய அழுகின்ற ஓசைகளும் உங்கள் வீட்டுக் கதவுகளை எந்த நாளும் தட்டிக்கொண்டே இருக்கும்! நிம்மதியற்றுத் தூங்குகின்ற நிலையை உருவாக்கிக்கொண்டே இருக்கும்!

அண்மையில்கூட, நாமல் ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். ஏதோ இந்த உலகத்திலே இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற சிந்தனையில் அங்கு அவர் பேசினார். ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதுபோல’ எல்லாத் தமிழர்களும் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு, “யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன permit கேட்கின்றார்கள்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

தாஜுதீனைக் கொலைசெய்தோ அல்லது ஆடம்பர வாகனங்களைக் கொள்வனவு செய்து வீடுகளுக்குப் பின்னால் மறைத்து வைத்தோ அல்லது மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தோ வாழ்பவர்கள் அல்லர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள். எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இதே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டார்; கோத்தபாயவினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அதற்கான நீதி கிடைத்ததா? கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஜோசப் பரராசசிங்கம் churchஇல் வைத்துக் கொல்லப்பட்டார். இன்றுவரை என்ன நீதி கிடைத்திருக்கின்றது? சாட்டுக்கு ஒருவரை அடைத்து வைத்திருக்கின்றார்கள். அவரைக்கூட விடுதலை செய்ய முயற்சிக்கின்றார்கள். இந்த நாட்டினுடைய நீதியான தன்மைகளா இவை? இவையெல்லாம் மிக மோசமான செயற்பாடுகளாகும். நீதி எங்கே கிடைக்கப்போகின்றது?

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓநாய்கள் தங்களுக்கு வெள்ளைப் பூச்சுப் பூசிவிட்டு தங்களை வெள்ளாடுகளாக நிரூபிக்க முடியாது. ஓநாய் ஓநாய்தான்! என்ன paint பூசியிருந்தாலும் அவர்கள் இந்த நாட்டிலேயிருக்கின்ற தமிழ் மக்களுடைய இரத்தங்களைக் குடித்த ஓநாய்கள்தான். அதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்! அதனை விடுத்து நீங்கள் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால், அது எந்தக் காலத்திலும் சரிவராது. நாங்கள் யாரையுமே நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை. அது மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியாக இருக்கலாம், மைத்திரிபால சிறிசேனவுடைய ஆட்சியாக இருக்கலாம், ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய ஆட்சியாக இருக்கலாம், யாருக்கும் இதுவரை இதய சுத்தி ஏற்படவில்லை. இந்த நாட்டிலே ஓர் இனப் பிரச்சினை இப்பொழுதும் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டு, தமிழர்கள்மீது புரியப்பட்ட இனப் படுகொலைகளை ஏற்றுக்கொண்டு நீதி வழங்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லையென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இந்த நாட்டில் யாரும் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நாட்டினுடைய கௌரவம் நிலைநாட்டப்பட வேண்டுமானால், இந்த நாடு சுபிட்சமுள்ள ஒரு நாடாக மாற்றம்பெற வேண்டுமானால், இந்த நாட்டிலே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், முதலிலே தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலைகளை நீங்கள் நீதியோடு அணுகுங்கள்! அதற்கான தீர்வைத் தருவதற்கு முன்வாருங்கள்! இன்றுவரை தங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கைக்காக உண்ணாவிரதமிருந்து போராடிய 6 தாய்மார் இறந்திருக்கின்றார்கள். இது மிகவும் அபாயகரமானது. இந்தச் சூழல்கள் எல்லாம் கடந்து இப்பொழுதும்கூட, அதே நிலைமையினைத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இப்போது எமது பிரதேசங்களில் பல இடங்களிலே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு நகரம் ஆகிய இடங்கள் அடிக்கடி சோதனையிடப்படுகின்றன. ஏன்? என்ன காரணம்? எதற்காக இந்தச் சோதனைகள்? நாங்கள் அங்கிருந்து கொழும்புக்கு வருவதென்றால், மதவாச்சியைக் கடந்துவிட்டால் எளிதாக வரமுடியும். அதன் பின்னர் எந்தச் சோதனையுமில்லை. ஆனால், இங்கிருந்து சென்று மதவாச்சியைத் தாண்டி யாழ்ப்பாணம் போவதென்றால், கண்ட கண்ட இடமெல்லாம் சோதனைகள் நடைபெறுகின்றன.

இதனைவிட, இன்னுமோர் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திலே நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே கரவெட்டிப் பிரதேச செயலாளர் எஸ். தயாரூபன் அவர்கள் ஓர் அபாயகரமான செய்தியைத் தெரிவித்தார். கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் மட்டும் அண்மைய நாட்களில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளினால் 14 இளங்குடும்பங்கள் விவாகரத்துக்குச் சென்றுள்ளமையுடன் பெற்றோர்கள் தலைமறைவாகியுள்ளமையினால் பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தைக் கூறினார். இது மிக மோசமான ஒரு நிலைமை! இன்று யாழ்ப்பாணத்திலிருக்கின்ற ஒரு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் எழுமாற்றாக 14 குடும்பங்கள் என்றால், அங்கிருக்கின்ற 15 செயலாளர் பிரிவுகளிலும் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! வடக்கு மாகாணத்திலிருக்கின்ற 33 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழ்கின்ற மக்களுடைய அவலமான வாழ்க்கைக்கு யார் நீதி தரப்போகின்றார்கள்? நுண்கடன் திட்டத்தினூடாக இன்று அவர்கள் அநாதைகளாகத் தெருவுக்கு வந்திருக்கின்றார்கள்.

போரின்போதும் போருக்குப் பிற்பாடும் அவர்கள்மீது பொருளாதார யுத்தம் புரியப்பட்டதன்மூலம் இன்று பொருளாதாரமும் இன்றித் தீர்வுமின்றி இந்த மக்கள் தெருவுக்கு வந்திருக்கின்றார்கள். இந்த அவசரகாலச் சட்டம் என்பது இப்பொழுது தேவையற்ற ஒன்று. இந்த நாட்டுக்கு அது தேவையான ஒன்றாக எனக்குத் தென்படவில்லை. நாங்கள் அதனை எதிர்த்துத்தான் வாக்களிப்போம்.

Recommended For You

About the Author: Editor