அரிசியில் கலப்படம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டன.

இதன் மாதிரிகள் ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

“வெள்ளை பச்சை அரிசிக்குச் சிவப்பு நிற நிறமூட்டியைப் பயன்படுத்தி நிறமூட்டப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான 3 ஆயிரம் கிலோ கிராம் நிறமூட்டப்பட்ட அரிசி மாத்தறை, முலட்டியன பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெலியத்த பகுதியைச் சேர்ந்த மொத்த வர்த்தகரொருவரே குறித்த அரிசி தொகையினை வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. குறித்த நிறமூட்டப்பட்ட அரிசி காத்தான்குடி மற்றும் கல்முனை பகுதியில் தயாரிக்கப்பட்டதெனவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அரிசி தொகையினை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை பச்சை அரிசியினை சிவப்பு பச்சை அரிசியாக மாற்றுவதற்கு நிறமூட்டும் செயற்பாடுகள் மேலும் இடம்பெறுகின்றதா என்பது குறித்து விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான மோசடி நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களும் தகவல் வழங்க முடியும்” என மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor