மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்பொழுது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணத்தின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் ,ஐந்து மாவட்ட அரச அதிபர்களுக்கும், மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, ஓகஸ்ட் 31ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. வடமாகாணத்தில் பதினையாயிரத்து இருநூற்று பதின்மூன்று (15,213) பாடசாலைப் பரீட்சார்த்திகளும், மூவாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு (3,857) தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். வடமாகாணத்தில் இருநூற்று பதினேழு (217) பரீட்சை நிலையங்களில் உயர்தரப்பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor