பயங்கரவாதிகளால் ஈஸ்டர் தாக்குதலைப் போன்று 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்!

புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரவாதிகளுடையவை எனும் பட்சத்தில், அவர்கள் ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

அத்தோடு உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக்கூடாது என்றும் இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) சாட்சியம் அளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “களத்தில் இறங்கி செயற்படும் புலனாய்வு உறுப்பினர்கள்தான் தம்மை வெளிப்படுத்திக்கொள்வது குறித்து கவலைப்பட வேண்டும்.

தம்மை வெளிப்படுத்திக்கொள்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவலைப்படக்கூடாது. இத்தகைய உயர் அதிகாரிகள் கள நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

அவர்கள் தமது முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

எங்களுக்குத் தெரிந்தவரை, ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது எமது காவலில் உள்ளனர். இந்தப் பிரச்சினை 80 சதவீதம் தீர்ந்துவிட்டது.

புத்தளம்- வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் திசைகாட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை தரை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுபவை.

ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர வேறு பல தாக்குதல்களை நடத்தும் நோக்கமும் அவர்களுக்கு இருந்தது.

புத்தளத்தில் நாம் பெருமளவு வெடிபொருட்களை கைப்பற்றினோம். அவையும் அவர்களிடம் இருந்திருந்தால், ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்.

புத்தளத்தில் கண்டுபிடித்த இடத்தில் அவர்கள் வெடிபொருட்களை பரிசோதித்துள்ளனர். காட்டுப் போர்முறைக்கான பயிற்சி முகாமாக அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

தாக்குதல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றிருந்தபோதும் அதனை மூடி வைத்திருந்தது தவறு. அந்த தகவல்கள் எமக்கும் பகிரப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் தாஜ் சமுத்ரா விடுதியில் சில முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்ததால்தான், தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்யவில்லை என்று கூறப்படும் கருத்துடன் நான் இணங்கவில்லை.

தாஜ் சமுத்ரா விடுதியில் பெறப்பட்ட காணொளிப் பதிவை நான்கு முறை பரிசோதித்துள்ளோம். அதில், தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைப்பதற்கு இரண்டு முறை முயற்சித்தும் அது வெடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அதன் பின்னரே அவர், அங்கிருந்து வெளியேறி தெஹிவளையில் உள்ள தனது அறைக்குச் சென்று அதனை பொருத்த முயற்சித்திருக்கிறார். அப்போதே அந்தக் குண்டு வெடித்துள்ளது” என்றும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor