மானிப்பாய் விவகாரம் – வாள்வெட்டுச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது தப்பிச்சென்ற வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த மூவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மானிப்பாய் இணுவில் வீதியில் கடந்த சனிக்கிழமை இரவு 3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் கொண்ட கும்பலை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர்.

எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தப்பியோடியவர்கள் எனும் சந்தேகத்தில் மூன்று இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor