பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாகியது

பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில்  ஒன்றுகூடினர்.
பழைய மாணவர் சங்கங்களின் தனித்துவத்தினையும், சுயாதீன இயங்கு தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கும், மேற்படிச் சுற்றுநிருபம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கும் வடமாகாணம் தழுவிய ரீதியில் ”பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்” இக்கலந்துரையாடலின் இறுதியில் உருவாக்கப்பட்டது.
மேலும் அக்கலந்துரையாடலில் மேற்படிச் சுற்றுநிருபத்தினால் சங்கங்கள் சுயாதீனமாக வங்கிக் கணக்குகளை கையாள்வதை சில வங்கிகள் தடுத்துள்ளமை, வங்கிக்கும் சங்கங்களிற்கும் இடையிலான சட்டரீதியான இணக்கப்பாட்டிற்கு முரணாகவும், வழமையான நிதிநடைமுறைகளிற்கு மாறாகவும்  அமைந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதோடு, இந்நிலைக்கு எதிராக வங்கிகளை சட்டவல்லுநர்களின் உதவியோடு சட்டரீதியாக கேள்விக்குள்ளாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.

பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் தொடர்பான தொடர்புகளிற்கும், மேலதிக விபரங்களிற்கும் தொ.பே.இல 0705072888, மின்னஞ்சல் osaforumnp@gmail.com

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு உறுதிசெய்த வேளை இக்கூட்டம் ஆரம்பக்கட்டமாக பிரச்சனைக்குள்ளாகியுள்ள பழையமாணவர்சங்கங்களின் பிரதானிகளுடனான ஒரு கூட்டமாக நடைபெற்றதாகவும் தொடர்ந்து கூடி  ஒன்றியம் தொடர்பிலான கட்டமைப்புக்களை  வரையறுத்து மேலும் விஸ்தரித்து இறுதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே வேளை வடக்கு மாகாண ஆளுனரால் சுற்றுநிருபம் ஒன்று வடக்கு கல்வியமைச்சின் ஊடாக  அனுப்பப்பட தயாராக உள்ளதாக ஆளுனர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த சுற்று நிருபத்தின்படி பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் சேகரிப்பு  கட்டுப்பாடுகள் வரவுள்ளதாகவும் பழையமாணவர்சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கங்கள் ஆகியவற்றுக்கு அதிபர்கள் தலைவர்களாக இருக்கமுடியாது  என்று வலியுறுத்தப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேற்படி ஒன்றியம் உருவாகியுள்ள நிலையில் வடக்கு கல்விமுன்னேற்றம் பாடசாலைகளில் நிலவும் சீர்கேடுகள் குறித்து ஒரு குரலில் கொள்கை வகுத்து செயற்படும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Recommended For You

About the Author: webadmin