யாழ். நகரில் பொது வீதி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறு கோரியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளுக்கு இடையில் குறித்த வீதி காணப்பட்டது. அதனை வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் சட்டத்திற்கு புறம்பான முறையில் அபகரித்து தனது கடையுடன் இணைத்துள்ளார். இதனால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது.

இவ்விடயம் குறித்து யாழ்.மாநகர சபையின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் அது தொடர்பாக எவ்விதமான சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்க நிர்வாகம் தயக்கம் காட்டி வருகின்றது.

சட்டவிரோத அபகரிப்பு குறித்து சகல ஆவணங்களும் இருக்கின்ற நிலையில் மாநகர சபை நிர்வாகம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அபகரிக்கப்பட்ட குறித்த வீதி, மீண்டும் மக்களுடைய பொது பாவனைக்காக திறந்து விட வேண்டும் எனக்கோரியும், அவ்வீதியை அபகரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இப்போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor