யாழில் 8 வயது மாணவி துஸ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த விசாரணை நேற்று முன்தினம் (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டு எனவும் பொலிஸாரால் மன்றில் கூறப்பட்டது. இதனை பரிசீலித்த நீதவான் அவரை ஜூலை 2 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 27ஆம் திகதி பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உட்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் மாணவியின் பெற்றோருக்கு இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

அதன்பிரகாரம் மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என சட்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor