லண்டனில் உள்ள MCC இன் தலைவராக குமார் சங்கக்கார நியமிப்பு

லண்டனில் உள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் லோட்ஸில் நடைபெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC) குமார் சங்கக்கார, 2011 ஆம் ஆண்டு பெறுமதியான உரையை ஆற்றியிருந்தார். அதனால் அந்தக் கழகத்தால் அவருக்கு 2012 ஆம் ஆண்டு மரியாதைக்குரிய வாழ்நாள் உறுப்பினர் என்ற கௌரவமளிக்கப்பட்டது. அதே ஆண்டில் அந்தக் கழகத்தின் உலக கிரிக்கெட் குழுவின் உறுப்பினராக இணைந்து கொண்ட குமார் சங்கக்கார, தொழிப்படும் உறுப்பினராக சேவையாற்றினார்.

உலக கிரிக்கெட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் எம்சிசி, கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor