நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகளைக் கண்டித்து திருநெல்வேலி மரக்கறி வியாபாரிகள் பகிஸ்கரிப்பு

நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகளைக் கண்டித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் இன்று சனிக்கிழமை காலை முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தையில் நடைபாதைக் கடைகளை அகற்றுவதற்கு பிரதேச சபை எடுத்த நடவடிக்கைக்கு அமைய சபையின் ஏற்பாட்டில் பொலிஸாரின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டன.

ஆயினும் தமது கடைகளை அகற்றப்படுவது தொடர்பில் தமக்கு ஏதும் அறிவிக்கவில்லை என்றும் பொலிஸாரின் உதவியுடன் பிரதேச சபையினர் அடாவடித்தனமாகவே கடைகளை அகற்றுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்திரந்தனர்.

இதனால் நேற்றையதினம் இரு தரப்பினர்களுக்கிடையேயும் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் இன்றையதினம் சந்தை வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பிரதேச சபைக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் வியாபார நடவடிக்கைகள் முற்றாகப்பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனால் சந்தைக்கு சென்ற பல பொது மக்களும் பலத்த ஏமாற்றங்களுடன் திரும்பிச் சென்றிருந்ததைக் காணக் கூடியதாக அமைந்திருந்தது.

Recommended For You

About the Author: Editor