நிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்!

கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவித்த சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார், இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அவரை பிணையில் விடுக்கவேண்டாம் என்று மன்றில் கோரியுள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தவபாலன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து விவாதித்தார்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் (கத்தோலிக்கம் அல்லாத) போதகராக கடமையாற்றும் குறித்த நபர், கனடாவுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து நபர் ஒருவரிடம் 45 இலட்சம் ரூபாய் பணம் வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக 35 இலட்சம் ரூபாயை வழங்குமாறு போதகர் கோரியுள்ளார்.

அதற்கமைய முதற்கட்ட தொகையை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருட காலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாக பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச்செய்த பற்றுச்சீட்டை ஆதாரமாகக்கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor