நல்லூரில் கைக்குழந்தைகளுடன் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள்! – அதிகாரிகள் அசமந்தம்

நல்லூர் உற்சவ காலத்தின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது.

வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் பெறுகின்றார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள்.

இது தொடர்பில் அப்பகுதியில் கடமையில் இருக்கும் யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் ஆகியோரிடம் ஆலயத்திற்கு வந்த பலரும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அது தொடர்பில் அங்கு கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் பெண் ஒருவரிடம் வினவிய போது,

“நாங்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். நல்லூர் உற்சவ காலத்தில் வியாபார நோக்குடன் வந்து யாழ்.நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளோம். நல்லூரில் ஊதுபத்தி விற்றுவிட்டு இரவு நடந்து (சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம்) விடுதிக்கு செல்வோம்” என தெரிவித்தார்.

எத்தனை பேர் வந்தீர்கள்?, யார் இங்கு கூட்டி வந்தார்கள்? போன்ற மேலதிக கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தனது வியாபர நடவடிக்கையில் ஈடுபட தொடங்கினார்.

இவர்கள் ஒரு குழுவாகவே வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளார்கள். அவர்களை அழைத்துவந்து இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நபர்கள் யார் என்பது கண்டறிய முடியவில்லை. இந்நிலையில், அதிகாரிகள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor