பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கவும்: சுகிர்தன்

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அச்சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்குப் பகுதியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவில்லை.

இவ்வாறு விடுவிக்கப்படாத பகுதிகளிற்குள் அரச கட்டடங்கள் பலவும் பாடசாலைகளும் விடுவிக்கப்பட வேண்டிய நிலமை காணப்படுகின்றது. இதில் எமது சபைக்குரிய 7 கட்டடங்களும் உள்ளன.

வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக கட்டடம் கூட இன்று வரை விடுவிக்கப்படவில்லை. அதேபோன்று எமது சபையின் காங்கேசன்துறை அலுவலகத்தின் நூல் நிலையம், பிரதேச சபையின் சிறுவர் பூங்கா என்பவற்றோடு பிரதேச சபைக்குரிய வாடி வீடும் படையினரின் கட்டுப்பாட்டில் இன்றும் காணப்படுவதோடு குரும்பசிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இவ்வாறு எமது சபைக்குரிய கட்டடம் படையினரின் வசமுள்ள நிலையில் சபையின் செயல்பாடுகளிற்காக நாம் தனியாருக்கு சொந்தமான கட்டடங்களை வாடகைக்கு பெற்றே பயன்படுத்துகின்றோம்.

இதனால் வலி.வடக்கில் இடம்பெறும் அபிவிருத்திகள் பல தாமதங்களை கண்டுவரும் நிலையில் மிகவும் முக்கிய விடயமான விடுவிக்கப்படும் பிரதேசத்திற்கான மின்சார விநியோகம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது.

மின்சார சபை அலுவலக வளாகம் படையினரின் வசமுள்ளதால், மின்சார சபை தமது செயற்பாட்டிற்காகவும் திடீர் பழுதுகள் ஏற்பட்டாலும் 18 கிலோ மீற்றர் பயணித்தே தமது சேவையை வழங்குகின்றன.

ஆகையால் படையின் வசமுள்ள எமது சபையின் 7 இடங்களையும் மின்சார சபையின் இடத்தையும் கண்டிப்பாக விடுவிக்க வேண்டிய தேவை உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor