கிளிநொச்சியில் தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு பாலியல் குற்றச்சாட்டில் விளக்கமறியல்!

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில், அங்கு கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் துஸ்பிரயோகம் ,பாலியல் தொந்தரவு பலமுறை இடம்பெற்று வந்துள்ளன.

இதற்கு நடவடிக்கை எடுக்க பலரும் முன்வராத நிலையில், கண்டாவளை பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் முயற்சியில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து தர்மபுரம் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து குறித்த நிர்வாகி நேற்று (17) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

எனவே இவ்வாறு தங்களது பிள்ளைகள் எந்த கல்வி நிலையங்களில் கல்வி கற்கின்றார்கள், அவர்களது பாதுகாப்பு எவ்வாறாக உள்ளது என்பதனை கருத்தில் கொண்டு தமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உண்டு.

சிறுவர்களைப் பொறுத்த வரையில் ஏமாற்றி தவறாக வழிநடத்த பலர் காத்திருகிறார்கள்.

தமது பிள்ளைகளை பெற்றோர் பாதுகாப்பாக பார்க்க வேண்டியது அவர்களது கடமையும் கூட என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor