வடக்கு இளைஞர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஒருசிலர்: முதலமைச்சர்

வடக்கு இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இட்டுச்சென்று அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இன்றைய காலகட்டத்தில் சூழ்நிலையில் இளைஞர்கள் யுவதிகள் பற்றிய முறையான வழிகாட்டல்களும் நல்வழிப்படுத்துதலும் மிக அவசியமாக உணரப்பட்டுள்ளன.

இளவயதுப் பிள்ளைகள் முக்கியமாக இளைஞர்கள் சுயமாக சிந்திப்பதைத் தடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே நன்கு திட்டமிடப்பட்டு அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் குறிப்பிட்ட வகுதியினர் செயற்பட்டுவருகின்றார்கள்.

இளைஞர்களின் சிந்தனைகளை தீயவழிகளிலும் நவீன கலாச்சாரம் என பலராலும் வர்ணிக்கப்படுகின்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளிலும் இட்டுச்செல்வதை நாங்கள் நிறுத்த வேண்டும்.

வீண் பணவிரயங்களில் எமது இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். சுயமாக உழைத்துப் பணம் ஈட்டாமல் யாரோ அனுப்புவதை வைத்து பந்தா காட்டுகின்றார்கள்.

நவீன கையடக்கத் தொலைபேசிகளினூடாக வலைத்தளங்களுக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது நேரத்தையும் மனதையும் பறிகொடுத்து நிற்கின்றார்கள்.

இளைஞர்களின் உயிர்க்கொல்லியாக நவீனரக மோட்டார் சைக்கிள்கள் மாறியுள்ளன. சமூக கலாச்சாரப் பிறழ்வுகளில் ஈடுபட தூண்டுகின்ற வகையில் சூழலானது எமது இளைய சமுதாயத்தைப் பாதித்து வருகின்றது.

இக் காலகட்டத்தில் திக்கம் சனசமூக நிலையம் தமது பகுதியில் உள்ள இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பதும் இவ் இளைஞர் யுவதிகளை சீரிய வழியில் சிந்திக்க வைப்பதற்கு மொழி பற்றிய அறிவு விருத்தி மற்றும் இலக்கண இலக்கியங்களில் இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டக்கூடியதான நிகழ்ச்சி முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருப்பது என்பன உண்மையிலேயே மிகவும் பாராட்டிற்குரியது. என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor